Thursday, 20 November 2014

துன்ப நேரத்தில்...!

துன்ப நேரத்தில்...!



      ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன்.சர்வ வல்லமையான தேவன் அவளை நடத்தின விதம் குறித்தும்,அற்புதங்கள்...இன்னும் நம் வாழ்வியலின் தேவைகள் அனைத்திருக்கும் இந்த சம்பவங்கள் நிறைய சாட்சிகளை,ஒரு விசுவாச பெலனை நமக்குள் கொண்டு வருகின்றது. ஒரு உற்சாகமான மன நிறைவை தரும் இந்த ஒரு சம்பவம்.

"துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பின்பு......", (ஆதி 21:15)

       ஆகார்  தன் எஜமானியால் புறம்பே தள்ளப்பட்டாள், துக்க முகத்துடன் வழிக்கு தண்ணீரும்,அப்பமும் கொடுத்து அனுப்பிய கணவன்.யாரை நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தாயோ,எதை நம்பி உன் வாழ்வு சுகமாய் இருக்கும் என்று எண்ணினாயோ,இவர் தான் எனக்கு எல்லாம்,இந்த தொழில் தான் எனக்கு வாழ்வு தரும்,இந்த வேலை தான் எனக்கு நிரந்தரம்...என்று எதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து இன்று அந்த வாழ்வை,சுகத்தை, உறவை, அன்பை, பொருளாதரத்தை இழந்து நிற்பாய் எனில் உனக்காகவே இந்த வார்த்தை.பல நம்பிக்கைகள் மேல் நம்பிக்கை வைத்து, மனிதனின் வாய் வார்த்தைகளை நம்பி உன் காலங்களை நடத்தி கொண்டு இன்று அது பொய்த்து போன சூழ்நிலையில் உன் வாழ்வு இருக்குமானால் உனக்காகவே இந்த வார்த்தை. இனி என்னிடம் ஒன்றும் இல்லை,எல்லாம் இழந்து விட்டேன், நான் நம்பியிருந்தவர் என்னை விட்டு விட்டார்,பிள்ளைகளால்  கைவிடப்பட்டு, கணவனால் துரத்தப்பட்டு, பணம் பொருள், வேலை, தொழில், உறவுகளை இழந்து நின்று, இனி உறவோ, நம்பிக்கையோ,வாய்ப்போ எதுவும் இல்லாத சூழ்நிலையில் இருப்போமானால்,அன்று ஆகாரும் தன் துருத்தியில் உள்ள தண்ணீர் செலவழியும் வரை அவள் அதன் மீதுதான் தன் நம்பிக்கை வைத்திருந்தாள்.


….சத்தமிட்டு அழுதாள்....(ஆதி 21:16)

             ....தண்ணீர் செலவழிந்த பின், எங்கு தேடியும் தண்ணீரோ அதற்கான வாய்ப்போ,வேறு எதுவும் இல்லாத சூழ்நிலையில் தான் அவள் கதறுகின்றாள்.
          உங்கள் வாழ்கையும் இன்று இது போன்ற தான நிலைகளில் இருக்கலாம். இனி என் தொழில் நடத்தவே முடியாத நிலையில் நான் நிற்கின்றேன், நஷ்டத்தின் மீது நஷ்டம், கடன், அவமானம், சாவது ஒன்றே என் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு, என்று சாவினை பற்றிய சிந்தனைகளில் உங்கள் மனம் இருக்கலாம்.என் எல்லா நிலைகளும் தோல்வியே, எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? எல்லா முயற்சியும் செய்தாகிவிட்டது, என் பிள்ளையின், என் கணவரின், என் மனைவியின், இந்த பெலவீனம், வியாதி தீரவே தீராதா? அவர்கள் படும் வேதனையை என்னால் காண முடியவில்லை என்ன செய்வேன் நான்? இதற்கான பணத் தேவைக்கு யாரிடம் போவேன்..என் வியாபாரதிர்க்காய் நான் வாங்கிய கடனை அடைக்க, இனி எதை கொண்டு திருப்பி செலுத்துவேன்?....ஒன்றுமே இல்லையே...எனக்கு பின் இந்த பின் என் பிள்ளையை யார் கவனித்து கொள்வார், நினைத்தாலே நெஞ்சம் பதறுகின்றதே,நினைக்கவே முடியவில்லையே, யார் செய்த பாவம், எதினால் இந்த சாபம்? என் குற்றமா? என் பாவத்தின் சாபமா? என் வாழ்கை ஏன் இப்படி அமைந்தது? எவ்வளவோ அநியாயம் அக்கிரமம் செய்பவர் எல்லாம் சுகமாய்,சந்தோஷமாய் வாழும் போது பழி, பாவங்களுக்கு அஞ்சி வாழும் எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? படைத்த ஆண்டவனே என்னை அடித்து விட்டானோ, இனி எனக்கு மீட்சியே இல்லையா, வழியே இல்லையா, என் வாழ் நாள் முழுவதும் இந்த வறுமை, நோய், கடன், தரித்திரமான வாழ்க்கை தான் வாழ வேண்டுமா  என்று குழம்பி போன மனநிலையில் உங்கள் வாழ்வு இருக்குமானால், அன்று ஆகாரும்  தன் பிள்ளை தண்ணீர் தாகத்தினால் சாவதை காணமாட்டாமல் இனி என்ன செய்வேன் என்று அழுது கொண்டு இருந்தாள். 



....தேவன்  பிள்ளையின் சத்தத்தை கேட்டார்...(ஆதி 21:17)
 
           அழுது கொண்டு இருக்கும் நீங்கள் இப்போது உங்கள் கண்களை, உங்கள் நம்பிக்கைகளை, உங்கள் விசுவாசத்தை, சர்வ வல்லவர் மீது வையுங்கள். வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் உங்களுக்கு ஒத்தாசை செய்வதற்கு ஆயுத்தமாய் இருக்கிறார். உங்கள் கண்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்க்கவும். நிச்சயமாய் உங்கள் நம்பிக்கை முழுவதும் அவரே, என்று இருந்தால் இன்று உங்களுக்கும் உங்கள் வார்த்தைக்கும், உங்கள் சத்ததிற்கும், உங்கள் கண்ணீருக்கும் பதில் சொல்ல நேற்றும் இன்றும் என்றும் உயிரோடு இருக்கின்ற தெய்வம், ஒரு தகப்பன்,ஒரு நம்பிக்கைக்கு ஒருவர் இருக்கின்றார். அவர் ஒருவரால் தான் உங்கள் கண்ணீர்  துடைக்கப்படும்.அவர் ஒருவரே உங்கள் வேதனையை மாற்ற கூடும். அவர் ஒருவரே உங்கள் கடன், பொருளாதார பிரச்சனைகளை மாற்ற கூடும்.அவர் ஒருவரே உங்கள் வழிகளை திறக்க கூடும். அவர் ஒருவரே உங்கள் வியாதி படுக்கையை மாற்ற முடியும். எத்தனை மருத்துவம்,எவ்வளவோ பணம்,எவ்வளவோ பெரிய மருத்துவர் என்று அலைந்து வேறு வழியே இல்லை என்ற  உங்கள் நம்பிக்கைகள் தளர்ந்து போய் இருந்தால், அதை மாற்ற அவர் ஒருவரால் தான் முடியும்.


  ..அவள் கண்களை திறந்தார்.அவள் ஒரு தண்ணீர் துறவை கண்டாள்..(ஆதி 21:19)
            ஆகாருடைய கண்களை தேவன் திறந்தார்……! இன்று நீங்களும் அவரை நோக்கி பார்ப்பீர்கள் என்றால் இன்றைக்கு உங்கள் வழியை அவரே திறப்பார்.உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை அவரே கொண்டு வருவார்.உங்கள் வியாதி படுக்கையை அவரே மாற்றி போடுவார். உங்கள் வாழ்வும் துளிர்க்கும்.உங்கள் வேதனை,துக்கம் மாற கூடும்.ஆகாருக்கு ஒரு துறவை காண்பித்த தேவன் இன்று உங்களுக்கும் ஒரு வழியை வைத்து இருக்கின்றார்.உங்கள் நம்பிக்கைகளை,விசுவாசத்தை அவர் மீது வைக்கும் போது நிச்சயமாகவே அற்புதமான வாசல் உங்கள் வாழ்க்கைக்கு திறக்கும்.ஆமென்.



குறிப்பு: 4000 ஆண்டுகளுக்கு முன் ஆகாருக்கு காண்பித்த தண்ணீர் துறவு இன்று சவுதி அரேபியா தேசத்தில் உள்ளது.